Happy new year 2012
காற்றில் வாழும் காற்றே!
மூச்சைத்தின்ன உடல்பையுள் பிடிபட்டாய்
காலம் கடத்தும் காலத்தை வாழ்வென்றாய்
உடல்பையின் வாழ்வு ஓட்டையின் கையில்
ஓட்டைவாழ்வில் மெய்யே பொய்யாக
ஊதிய காற்றே எங்கு செல்வாய்?
காற்றைக் கரியாக்கி
காலத்தைக் காலனுக்கு இரையாக்கும் காதல்
காலக்கடுப்பில்
சுனாமிவரப்பில்
வெள்ளப்பெருக்கில்
கரையுமா? குறையுமா?
காற்றிருந்தால் தான் மனம்
காற்றுப்போனால் அதுபிணம்.
காற்றே காற்றை காற்றாய் வாழவிடு.
சிந்துவின் விந்து தமிழர் என்றிருந்தும்
நிந்தனை செய்ததால் சிந்து சீறினாளோ?
வெள்ளம் வேவு பார்த்தது.
ஈழத்தமிழன் இரத்தத்தில்
சீனச்சுவர் சிவந்து விழுந்தது.
யப்பான் அணுவுலையில் உயிருலை
சுனாமி சுருட்டிப்போனதே ஒரு கலை
மெய்ஞானம் எல்லாம் பொய்ஞானமாகி
விண்ணாணம் பார்த்தது விஞ்ஞானம்.
துனீசியத் தெருவில் தெறித்தது ஒரு தீப்பொறி
போரில் பொரிந்த தலைகளிலும் இழுபறி
பற்றிய தலைகள் எண்ணையில் எரிய
முற்றிய மார்க்கங்கள் மூடிக்கிடக்க
தீக்கள் தின்றது காடல்ல? நாடே
நாடு நாடாத நாடுகள் கூடி
எண்ணையை நாடின.
நாடு நமக்கில்லை -இருந்தும்
எண்ணை அதிலில்லை
நாதியும் எமக்கில்லை
போதிமரத்துப் போதிகளால்
மீதி? மீதியாய் வாழ்வே பாதி
ஆண்டாண்டாய் ஆண்டவன்
நாட்டவரின் உருத்திர தாண்டவத்தில்
2011வரை ஆடினான்
ஆடி ஆடியே ஓய்தான்.
போர் போர் என்று தன்
பொருளாதாரத்தை போட்டுடைத்தான்
போக்கத்த மேற்கத்தையன்
வறுமையில் ஒடியது
வெறுமையில் வாடியது 2011
உபாமா
உசாமாவிளக்கில் எண்ணை தேடி-கடைசியில்
கடலுக்குள் போட்டார் தன் நன்மை நாடி.
எண்ணையில் எரிந்தது 2011
இன்னும் எரியுமா? மனிதமே புரியுமா?
களமாடிய மகிந்தனை
இலங்கையின் கொலைக்களம்
களமாடியது?.. மனமாடியது
தினமாடிய தமிழரின் மனங்களில்
ஐநா பிணமாடியது.
சூரிய திசையில்
சூரியன் அஸ்தமனமற்ற இராச்சியத்தில்
சுட்டதே சூரியன்.
கடைகள் வெடித்துத் தெருவில் விரிய
பாதுகாவலர்களே பயந்து ஓட
பொருள்கள் எல்லாம் இலவசம்
இலண்டன் எங்கும் 2011 பரவசம்.
கிறுக்குப்பிடித்த நள்ளிரவுச் சூனி(ரி)யன்
இஸ்லாத்தைக் குறிவைத்து
பாலகர்க்குப் பொறிவைத்தான்
அமைதிப்புறா உதிரத்துடன் உயர்ந்தபடி
ஊருக்கு உபதேசம் இனி உனக்கில்லையடி
வடகொறிய நாட்டுக்குப் பொறிவைத்தார்
அணுவாயுதத் தந்தை காலனால் பறிபட்டார்
மார்பு தட்டியவர் மாரடைப்பில் போக
கண்ணீரில் பிறக்கிறது புத்தாண்டு
சென்னீரும் வெளிறுமோ இவ்வாண்டு?
பெரியாரணையைப் புரியா மனிதா!
தண்ணீருக்கா தடை?
தண்ணீர் கரையுடைத்தால் கண்ணீர் -நீ
அக்கறைப்படும் உன் தரை
வெள்ளம் வெகுண்டால் எக்கரை?
புத்தாண்டில்
மனிதத்தின் வாயில் போடு சக்கரை.
கருணையற்ற காலம்
பதினொன்றைப் பந்தாட
மனிதவாழ்வு திண்டாட
கண்ணீரில் கரைத்தது காலம்- இனி
பன்னிரண்டு பிறக்குமா புதியகோலம்?
புனிதம் நிறைந்த மனிதம் வளர்க்கும்
கணிதம் கொண்ட காலமே பிறக்க.
மனுநீதி நிறைந்த தனிநீதி மார்க்கம்
பிறக்கும் புத்தாண்டில் பரவிச் சிறக்க.
2012ல் மனிதம் தேடும்
நோர்வே நக்கீரா.



கண்கீறிய காயங்கள்









